0%
NewsSri LankaTrending News

முடிந்தால் ஒரு கிராமத்தையேனும் காட்டுமாறு விக்னேஸ்வரனுக்கு கல்முனை முதல்வர் றகீப் சவால்..!

விக்கியின் முஸ்லிம் விரோத கருத்துகள், தமிழரின் அரசியல் தீர்வுக்கு ஒத்துழைப்பதில் இருந்து முஸ்லிம்களை தூரப்படுத்தும் என்றும் தெரிவிப்பு..!

கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருப்பதாக அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கின்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முடிந்தால் அவ்வாறு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்ட ஒரு தமிழ் கிராமத்தையாவது அடையாளம் காட்ட வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயாவின் இவ்வாறான முஸ்லிம் விரோத கருத்துக்கள், வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசில் தீர்வுக்கு, ஒத்துழைப்பதில் இருந்து முஸ்லிம் சமூகத்தை தூரப்படுத்தும் என்றும் முதல்வர் றகீப் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“வடக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக அம்மண்ணிலிருந்து புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதனால், அங்கிருந்த அத்தனை முஸ்லிம் கிராமங்களையும் முஸ்லிம்கள் இழக்க நேரிட்டது. அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்த பெரும்பாலான கிராமங்கள் இன்று தமிழ் கிராமங்களாக மாறியிருப்பதை எல்லோரும் அறிவோம்.

யாழ்ப்பாணத்தில் சோனகத்தெரு எனும் முஸ்லிம் பிரதேசத்தில் இன்று தமிழர்கள்தான் வாழ்கின்றனர். இவ்வாறு வடக்கில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பல கிராமங்கள், அங்கு இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு காரணமாக தமிழ் மக்களின் வாழ்விடங்களாக மாறியிருப்பதுதான் வரலாறாகும்.

அவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த போர்ச்சூழல் காரணமாக பல முஸ்லிம் கிராமங்கள், தமிழ் கிராமங்களாக மாறியிருக்கின்றன. மட்டக்களப்பில் அமைந்துள்ள சோனகத்தெருவிலும் இன்று முழுக்க முழுக்க தமிழ் மக்கள்தான் வாழ்கின்றனர்.

அதுபோன்று புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொக்கட்டிச்சோலையில் இருந்த பல முஸ்லிம் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் பாவற்கொடிச்சேனை தொடக்கம் புட்டம்மை வரை பல முஸ்லிம் கிராமங்கள் அழிக்கப்பட்ட வரலாற்றை மூடிமறைக்க முடியாது.

உண்மை இவ்வாறிருக்க கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பதாவது அதிர்ச்சியாக இருக்கிறது.

அவர் கூறுவது உண்மையாக இருக்குமானால், தமிழ் கிராமமாக இருந்து இன்று முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ள ஒரு கிராமத்தைத்தானும் விக்னேஸ்வரன் ஐயாவினால் காட்ட முடியுமா என்று சவால் விடுக்கின்றோம்.

இந்த விடயத்தில் தெளிவில்லாமல், எந்தவித ஆதாரமுமின்றி, பகிரங்கமாகவே ஒரு சமூகத்தின் மீது நீதியரசராக இருந்த ஒருவர் அபாண்டமாக குற்றம் சுமத்துவதானது, நீதித்துறைக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தும் செயலாகும்.

ஞானசார தேரர், ரத்ன தேரர், விமல் வீரவன்ச, உதய கம்பன்பில போன்ற பேரின கடும்போக்குவாதிகளும் வியாழேந்திரன், கருணா போன்ற தமிழ் இனவாதிகளும் பேசுவது போன்று ஓர் உயர்நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி, எல்லோரினதும் நன்மதிப்பை பெற்றிருந்த விக்னேஸ்வரன் ஐயாவும் இனவாதம் பேசுகின்றார் என்றால், இந்த நாடு தாங்குமா?

சிலரது அரசியல் வங்குரோத்தின் உச்சம், அவர்களை இனவாதம் பேசத் தூண்டுகிறது. அந்தப்பட்டியலில் விக்னேஸ்வரன் ஐயாவும் இணைந்திருப்பது குறித்து பரிதாபப்படுகின்றோம்.

இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் விடுதலைக்காக காலத்திற்கு காலம் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று உருவாகி, அவை சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளன.

இவை வெற்றியளிக்கவில்லை என்பதால்தான் 1980களில் இருந்து புலிகளின் ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இன்று தமிழர் உரிமை பற்றிப் பேசுகின்ற விக்னேஸ்வரன் ஐயா, அப்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட எந்த தமிழ் மகனுக்காவது குரல் எழுப்பியிருப்பாரா அல்லது நீதி பெற்றுக் கொடுத்திருப்பாரா?

அக்காலப்பகுதியில் தமிழர்களை அழித்துக் கொண்டிருந்த சிங்கள சமூகத்துடன் நீங்கள் சகவாழ்வை முன்னெடுத்து வந்துள்ளீர்கள். உங்கள் பிள்ளைகள் திருமணம் செய்திருப்பது எச்சமூகத்தைச் சேர்ந்தோரை என்பதும் நாங்கள் அறியாத விடயமல்ல. அக்காலப்பகுதியில் தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை நீங்கள் திரும்பியும் பார்த்திருக்கவில்லை.

ஆனால் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு, பிரபாகரனும் உயிரிழந்த பின்னர் நீங்கள் பரசூட் மூலம் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு, வடக்கின் முதலமைச்சராக அழகுபார்க்கப்பட்டீர்கள். அதற்கான அறுவடையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது கசப்புடன் பெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஏற்றிய ஏணியை எட்டி உதைத்து விட்டு, புதிய அரசியல் பாதையில் பயணிக்கின்ற நீங்கள் தமிழ்- முஸ்லிம் உறவை சீர்குலைத்து, அதன் ஊடாக உங்கள் சுயலாப அரசியலை முன்னெடுக்க துணிந்துள்ளீர்கள்.

ஆனால் இது வடக்கு- கிழக்கு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வுக்கு, ஒத்துழைப்பதில் இருந்து முஸ்லிம் சமூகத்தை தூரப்படுத்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என்றும் கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் குறிப்பிட்டுள்ளார்.

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker