0%
NewsSri LankaTrending News

தலைக்கவசம் உயிர்க்கவசம்

ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டுவதை கெத்தாக நினைக்கிறார்கள் நமது இளைஞர்கள்,

நான் செத்தா போலீஸுக்கு என்ன கவலை?
என்பதே இவர்களது பிரதான வாதம்.

நாம் வாழ்வதற்கான முழு உரிமை நமக்கு இருந்தாலும், இறப்பைத் தேடிக்கொள்ள நமக்குத் துளிகூட உரிமை இல்லை’ என்கிறது அரசியல் அமைப்புச் சட்டம்.

ஹெல்மெட் அணியாமல் செல்வதற்கு இவர்கள் கூறும் காரணங்கள், `முடி கொட்டிடும், வேர்த்துக் கொட்டும்… காது கேட்கவில்லை… சைட்ல வர வண்டி தெரியாமல் போய்விடும்’ என்பதுதான்.

வியர்வையால் முடி கொட்டுகிறது என்பவர்களுக்கு 6 முதல் 8 ஏர் வென்டிலேட்டர்கள் கொண்ட தலைக்கவசங்கள் கிடைக்கிறது.

பின்னால் வரும் வாகனங்கள் தெரிவதற்கு தடையாய் இருப்பது ஹெல்மெட் அல்ல, சைட் மிரர்களை சரியாக வைத்துக்கொண்டாலே போதுமானது. ஹெல்மெட் அணிவதில் எந்தவிதமான பிரச்னை இருந்தாலும், உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.

பொலிசுக்கு பயந்து கடனுக்காக மற்றவர்களின் ஹெல்மேட்டை அவசரத்திற்கு அணிந்துகொள்பவர்களும் எம்மில் உண்டு. தலைமுடி உதிர்வு பொடுகு தொல்லை போன்ற பின்விளைவுகள் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.

இரண்டு வருடங்களுக்கு முன் Slave island சந்தியில் வைத்து ஒரு Traffic police அதிகாரிக்கும் McDonald பைக் டெலிவரி பையனுக்கும் இடையில் வாய்த்தகராறு.
ஹெல்மட் போட்டு வந்தவர் அதன் பெல்ட் போடவில்லை என்பதே பிரச்சனை. பெல்ட் போடாததற்கு தண்டப் பணமோ தட-கொலே வழங்க முடியாது என்பதும் உண்மை.

வாதம் விதண்டாவாதமாக மாறி கைகலப்பு வரைக்கும் போக தயாராக இருந்தது, இருவருமே சிங்களவர்கள், யாருமே விட்டுக்கொடுப்பதாக இல்லை, நீண்ட நேரம் அவதானித்துவிட்டு
தேவையில்லாத விடயத்திற்காக நேரத்தை வீண்டிக்காமல் இவரை அனுப்பியிருக்கலாமே என நானும் காவல் அதிகாரியை சாடி பேசினேன், டெலிவரி தம்பிக்கு இன்னும் தைரியம் கூடி குரலை சற்று உயர்த்தி பேசலானார். அரசாங்க சம்பளம் போதாது போல அதான் பிச்சை வாங்குறதுக்கு என்னைய நிப்பாடிருக்கான் இந்த பொலிஸ்காரன் என்றார் தம்பி.

குண்டூசியால் குத்தியது போல் சுர்ரென கோபம் தலைக்கேறியது, பைக் சாவியை புடுங்கி பொலிசிடம் கொடுத்துவிட்டு தம்பியிடம் கூறினேன் நானும் பொலிஸ் காரன்தான், பைக்க விட்டு இறங்கு என்றேன், Boxல் உணவு இருப்பதாகவும் நேரம் சென்றால் ஓர்டர் கென்சலாகிவுடும் என்பதாகவும் அமைதியாக பேசலானார்.

டெலிவரி தம்பியின் அருகில் சென்று
ஹெல்மெட் போட்டா மட்டும் போதாது ஹெல்மெட்ல இருக்குற பெல்ட்டையும் போடனும் எனக்கூறி பெல்ட்டை பூட்டிவிட்டேன், பெல்ட் போடலேனா Suppose நீ வண்டிய விட்டு கீழ விழுந்தால் முதலில் ஹெல்மெட் தான் விழுந்து ஓடும் 2வது மண்டையும் சிதறிவிடும், நீ கொண்டு போற உணவும் ஓட்டோமெடிக்காய் கென்சல ஆகிவிடும், நாங்க கொடுக்கற ரிப்போர்ட வெச்சுதான் உன் மரண சான்றிதழ் தயாரிக்கப்படும், மூனுநாள் கழிச்சிதான் ஹொஸ்பிடல்ல உனது பிணத்தை கொடுப்பாய்ங்க, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அஞ்சு சதமும் உன்ட கொம்பனி கொடுக்காது, உனது பிணத்தை அடக்கம் பன்னுவதற்கும் அவர்கள் கடன் படவேண்டி ஏற்படும் என அடுக்கிக்கொண்டே போனேன்… இடையில் சுதாகரித்துக்கொண்ட தம்பி பேச்சை நிறுத்தி மன்னிப்புக் கேட்டார், தவறை உணர்ந்தவராக நிதானமாக விடைபெற்றார்.

தலைக்கவசம் என்பது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே 1914-ம் ஆண்டு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பைக் ரேஸ் நடைபெறும்போது தலையில் அடிபட்டு ஏகப்பட்ட வீரர்கள் மரணிக்க நேர்ந்தது, இன்னும் சிலர் தலையில் அடிபட்டு கோமாவுக்குச் சென்றனர். இதைத் தவிர்க்க வேண்டுமென நினைத்த டாக்டர் எரிக் கார்ட்னர் என்பவர் மோஸ் என்ற டிசைனரின் உதவியோடு தலைக்கவசங்களை உருவாக்கினார். முதலில் இதை அணிய மறுத்த வீரர்கள் பின்னர் இதன் மகத்துவம் உணர்ந்து அணியத் தொடங்கினார்கள். நம்நாட்டில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இது தளர்த்தப்பட்டிருந்தது, குறிப்பாக வட கிழக்கில்.

பின்னர் 2010லிருந்து மீளவும் அரசாங்கம் இதை அமுல்படுத்தியிருந்தும் எம்மவர்கள் கண்டுகொள்வதில்லை, காவல்துறையும் தொடர்ந்து வலியுறுத்தி விளிப்பூட்டியும் வந்தது என்பதை அனைவரும் நன்கறிவர்.

வெறுமனே பகட்டுக்காகவும் ஷ்டைல் எனும் பெயரில் நாட்டினுடைய ஒரு சட்டத்தை நமது இளைஞர்கள் அவமதித்து கேலிக்குள்ளாக்குவது கண்டிக்கத்தக்கதும் தண்டணைக்குரிய விடயமுமாகும்.

குழந்தைகள் தலைக்கவசம் அணிவதும் அவசியமாகும், குழந்தைகளுக்கு ஏற்ற தலைக்கவசங்கள் சந்தையில் தாராளமாகவே கிடைக்கிறது. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு முதுகெலும்பு வளர்ச்சி முழுமை அடைந்திருக்காது என்பதால் தலைக்கவசம் அணியக் கூடாது. அவர்களை இருசக்கர வாகனத்தில் கூட்டிச்செல்லாமல் தவிர்ப்பதும் நல்லது.

நான் மெதுவாகத்தான் செல்கிறேன் எனக்கு ஹெல்மெட் தேவை இல்லை” என்கிறவர்கள்
வீதியோரத்து மின்கம்பம் தலையில் விழுந்து ஹெல்மட் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்த இளைஞனின் காணொலியை கண்டிருக்க வாய்ப்பில்லை போலும்.

இந்திய மகாராஷ்டிர மாநில அரசு தலைக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடப்படாது” என்ற சட்டத்தையும் கொண்டு வந்ததிருந்தது.

போர்க்களங்களில், படைவீரர்கள் அனைவரும் தலைக்கவசங்கள் அணிந்தே சண்டையிட வேண்டும் என்பது சட்டத்தையும் தாண்டி இருந்துவரும் மரபு. இன்றும் நமது வீரர்கள் தலைக்கவசம் அணிந்தே அவசர கடமைகளுக்கு களமிறக்கபடுகின்றனர் வாகன நெரிசல்களுக்கிடையே அவசர அவசரமாக அலுவலகங்களுக்குச் சென்றடைவதும் ஒரு வகை போர்ச்சூழல் போன்றதொரு நிலையே. சாலைகளை போர்க்களமாக எடுத்துக்கொண்டால், வாகனங்களில் செல்லும் நாம்தான் வீரர்கள். வீரர்களான நாமும் தலைக்கவசம் அணிவது அவசியமே.

வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதையும் தாண்டி, மலைப்பாதைகளில் 2-வது கியரில் வாகனங்களை இயக்க வேண்டும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, பாதையில் குறிப்பிடப்பட்டுள்ள வேக எல்லையை மீற கூடாது, மலைப்பாதையில் மேல்நோக்கி வரும் வாகனங்களுக்கு வழி விட வேண்டும், சாலை சந்திப்புகளில் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும், பாலங்களுக்கு மேலால் செல்லும்போது எவரையும் ஓவர்டேக் பன்னக்கூடாது, பாதசாரி கடவைகளில் நின்று சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் போன்ற விழிப்பூட்டும் தகவல்கள் மக்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். .

உடையாமல் உறுதியாக இருப்பது மட்டும் தான் நல்ல ஹெல்மெட் என்று பொதுவாக கூற முடியாது. மோதுண்டாலும் அந்த பாதிப்பை குறைக்கும் வகையில் உரிய தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டவை தான் பலன் தரும்.

அதிவேகத்தில் தலை ரோட்டில் மோதும் போது தரம் குறைந்த ஹெல்மெட்கள் உட்புறமாக நசுங்கும். இதனால் தலையில் அடிபடும். தரமான ஹெல்மெட்கள் நசுங்குவதில்லை. தரமான ஹெல்மெட்களில் டபுள் டி ரிங் லொக் இருக்கும். இது தலையை விட்டு கழண்டு வராது. மேலும் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றாலும் தலையில் வைப்ரேஷனை உணர முடியாது.

நம்மை நாமே திருப்பதிப்படுத்திக்கொள்ள பொலிசாரை குற்றம் சாட்டிக்கொண்டிருக்காமல் நம் உயிரையும், நம் குடும்பத்தினரின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு ஹெல்மெட் அணிந்து எமது பயணங்களை தொடருவோம் . அத்தோடு ஹெல்மெட்டிலிருக்கும் பெல்ட்டை இறுக்கமாக அணிவதும் அவசியம்.

Thnx-feros mohamed-

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker