0%
NewsSri LankaTrending News

தனது இரு குழந்தைகளை வெட்டி கொலை செய்த தாயின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்.

“பல முறை தற்கொலைக்கு முயன்றும் சாக முடியவில்லை.கொலை செய்தாலாவது தூக்கு தண்டனை கிடைக்கும் என்றுதான் அவ்வாறு செய்தேன்.”

இதுதான் அந்த பெண்ணின் வாக்குமூலம்.வாழ்க்கை மீது எத்தனை வெறுப்புடன் வாழ்ந்திருக்கிறாள்?

அவளைப் பற்றி அவசரமாக மதிப்பீடு செய்வதை விடுத்து,அவளை அவளது நிலையிலிருந்து உணர்ந்தால் சில ஒளிக்கீற்றுகளாவது தெரியும்.

2015 ல் பிறந்த குழந்தையை 2017 பறிகொடுத்திருக்கிறாள்.தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்,கர்ப்பமடைகிறாள்,மீண்டும் 2018ல் அடுத்து இரட்டையர்கள்.இடையில் பலமுறை தற்கொலைக்கான முயற்சியும் தோல்விகளும்.எனவே அவள் பேற்றின் பின்னரான மன அழுத்தத்திற்கு உள்ளாகவில்லை.பீடிக்கப்பட்டிருந்த மனஅழுத்தம் இப்போது தீவிரமடைந்திருக்கிறது.

மனநிலை பாதிக்கப்பட்டதாக மருந்து பாவித்திருக்கிறாள்,தொடர்ந்து பாவித்தாளா? முறையான சிகிச்சை பெற்றாளா? தெரியவில்லை.மருந்துகள் மட்டும் எடுத்தாளா உளவள ஆலோசனையும் பெற்றிருப்பாளா? ஆயின் தொடர் சிகிச்சை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றே செய்தித் தளங்களில் காணக்கிடைத்தது.அதுதான் உண்மையாகவும் இருக்கலாம்.

ஒரு குழந்தையை விபத்தொன்றில் பறிகொடுத்த சில மாதங்களில் இன்னொரு முறை கருவுறுதல் உடலியல் ரீதியாக தயாரென்றாலும் உளரீதியாக தயாராக இருந்திருப்பாளா? என்பது பற்றி சிந்தித்திருக்கலாம்.ஏனென்றால் இடையிலொரு தற்கொலை முயற்சி நடந்திருக்கிறது.

மனநோய்க்கென சிகிச்சை பெற்றிருந்த சான்றுகள் இருந்தாலும் தொடர்ந்து மருந்து உட்கொண்டிருப்பாளா?
ஏனென்றால் கர்ப்பமான பெண் கண்ட மருந்தையும் குடித்தால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பேற்படலாம்,கருவிற்கு ஏதேனும் நடக்கலாம்,மருந்து குடித்துக் கொண்டு பாலூட்டுவது நல்லதல்ல என்று அறிவுரை சொல்லுமளவிற்கு VOG ‘s,Psychiatrists ஐ விட அறிவாளிகள்தான் நம் அண்டை வீடுகளில் இருப்பவர்கள்.

குழம்பிய மனமென்பது உதிர்ந்து விழுந்த பட்டாம்பூச்சியின் சிறகு போன்றது.சிறிய மூச்சுக் காற்றுக்கும் நொந்து ஒடிந்துவிடும்.ஏலவே ஒரு பிள்ளையை இழந்து காயமுற்றவளை சுற்றத்தார் எப்படி அணுகியிருப்பார்கள் என்பது பெரும் கேள்விக்குறி.
அதுவும் அருகில் தூங்கிய குழந்தை இவள் கண்ணயர்ந்த ஓரிரு நொடிகளில் நீரில் விழுந்திருக்கிறதென்றால் இவளது கவனயீனம் குறித்து எப்படியெல்லாம் மனசாட்சியில்லாமல் பேசியிருப்பார்கள்?என்னதான் படித்தவரென்றாலும் மனஅழுத்தம்,மனச் சிதைவிற்குட்பட்டவர்களை கையாளும் பக்குவம் எம்மவர்க்கு போதவே போதாது எனலாம்.

ஏனெனில் காய்ச்சல்,தலைவலி,புற்றுநோய் போல மனநோயும் ஒரு நோய் என்று நாம் கருதுவதேயில்லை.லூசு என்றும்,விசரி என்றும் தாராளமாய் ஏளனப்படுத்திவிடுகிறோம்.கூழாங்கல்லென்று எறியும் சொல் எத்தனை ஆழத்தில் அதிர்வை ஏற்படுத்தும் என புரிவதில்லை.

உளநோய்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இருந்திருந்தால் அந்த பெண் தனிமையில் விடப்பட்டிருக்க மாட்டாள்.யாருக்கும் தெரியாமல் அப்படி செய்யுமளவிற்கு வாய்ப்பும் இருந்திருக்காது.உளவள ஆலோசனைகள் நோயாளிகளுக்கு மட்டுமல்ல அவர்களை சூழவுள்ளவர்களுக்கும் நோயாளிகளை கையாள்வது குறித்த விழிப்புணர்வுகள் வழங்கப்படுதல் வேண்டும்.

மனநோயென்பது திடீரென உக்கிரமடைவதில்லை.அவளுடைய கடைசி நிலையும் அப்படியானதே.சம்பவ தினத்திற்கு முன்னைய நாட்களில் அவளுள் ஏற்பட்ட மாறுதல்கள் குறித்து யாராவது கவனமெடுத்திருந்தால் இன்னும் அவதானமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

அதற்கு முன் PSYCHIATRIST ,PSYCHOLOGISTS,COUNSELLORS பற்றி,அவர்களது வகிபாகம் குறித்து விழிப்புணர்வொன்று சமூகத்தில் ஏற்படுத்தப்படுதல் வேண்டும்.

மேலும் அந்தப் பெண்ணின் பிறந்த ஊர் நிந்தவூர் இல்லை.வெளியூர்ப் பெண். பழக்கவழக்கங்கள்,பேச்சுவழக்கு,உணவுப் பாரம்பரியங்கள் என மாறுபட்ட ஒரு ஊரின் சூழலிலிற்கு எத்தனை தூரம் இயைபாக்கம் அடைந்திருப்பாள்? என கரிசனை எடுத்திருக்க வேண்டும்.

தென்னையை நுவாரெலியாவில் நடுவதாலோ,தேயிலையை யாழ்ப்பாணத்தில் நடுவதாலோ கிடைக்கும் விளைச்சல்கள் குறித்து யாரும் சொல்லித் தெரிய வேண்டுமென்பதில்லை.ஏன் எத்தனையோ பேர் வாழும் போது இவளுக்கென்ன ? என கேள்வியெழும்பலாம்.சாதாரண பெண்ணால் முடியும் ,ஆயின் மன நோயினால் பாதிக்கப்பட்டவளிற்கு “உப்பு போதாது” என்று சொல்லும் ஒரு சிறு குறையும் பெரிதாகவே காயப்படுத்தும்.

அதுவும் மாமியார்,மைத்துனிகளுடன் பெண் வாழ்வதென்பது தாமரையிலைத் தண்ணீர் போன்றது.நல்ல தாயாகவே இருந்தாலும் நல்ல மாமியாரா ? என்பதும் நல்லதொரு மகளே என்றாலும் நல்ல மருமகள் தானா? என்பதும் எப்போதும் விடை காணா விசித்திரங்களே..
சில போது தன் உணர்வுகள்,ஏக்கங்கள்,கவலைகள்,அங்கலாய்ப்புகள் பற்றி வெளிப்படையாய் பேச ஒரு துணையை அவள் அங்கே பெறாமல் உள்ளே சிதைந்திருக்கலாம்.

பிறந்ததோ இரட்டைக் குழந்தை.ஒரு குழந்தையை வளர்ப்பதற்கே சிரமப்படும் போது இரட்டை குழந்தை என்பது அவளை சிரமப்படுத்தியிருக்கலாம்.பிள்ளை வளர்ப்பென்பது இலகுவானதொரு பணியில்லை.

பிள்ளை வளர்ப்பதென்ன கஷ்டமா? சமைப்பதும் ஆடைகளை துவைப்பதும் பெரிய வேலையா ?என கேட்கும் பெண்களே எம்மிடையே அதிகம்.ஆனால் மன அழுத்தத்திற்குட்பட்ட ஒரு பெண் படும் சிரமங்கள் அவர்களாக வாழ்ந்து உணர்ந்தால்தான் புரியும்.
ஒரு வெங்காயத்தை வெட்டவும் சிரமப்படுபவர்கள் உண்டு.தன் ஆடைகளை களைந்து குளிப்பதற்கும் அல்லாடுவார்கள் அவர்களென்று நாமெப்படி உணர்வது?
வெளியிலிருந்து பார்த்துவிட்டு சோம்பேறியிவள் என லேசாக கூறிவிடுவோம்.
வீட்டுப் பணிகள்,கணவனின் பணிகள்,குழந்தைகளின் பணிகள் ,விருந்தாளிகள் என தன் இயலாமையுடன் அவள் போராடியிருக்கலாம்.அவளுடைய சிரமங்கள் குறித்து சில போது கணவரும் கரிசனையின்றி இருந்திருக்கலாம்(அவரும் மனிதன்தானே),அது அவளை இன்னும் சுட்டெரித்திருக்கலாம்.

பணிப்பெண்ணொருவர் இருந்திருந்தாலும் அவளுடன் இவள் முரண்பட்டிருக்கலாம்.ஏனெனில் எதிலும் திருப்தியடையாமை,எல்லோருடனும் முரண்படுவது இத்தகைவர்களின் பண்புகளாகும் .அதுவே அவளை சிரமப்படுத்தியும் இருக்கலாம்.

முன்னர் தான் செய்த பொழுதுபோக்குகள் விடுபட்டது அவளை வதைத்திருக்கலாம்,குழந்தைகளுடன் தூக்கமின்றிய இரவுகளால் போதிய உறக்கமின்றி மூளையிலுள்ள stress hormones ன் அளவுகள் அதிகரித்திருக்கலாம்,வெளிப்பயணங்கள் மேற்கொள்ளாமையால் அலுப்பேற்பட்டிருக்கலாம்,பிள்ளைகளுடனான சிரமங்களால் உடலுறவின் தேவை பூர்த்தி செய்யப்படாமையால் விரக்தியுற்றிருக்கலாம்.

இப்படி நிறைய காரணங்கள் அவளுக்கு வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. நல்ல கணவன்,வசதியான வாழ்க்கையென்று எமக்கு தோன்றும் வாழ்வின் பின்புறம் சோகமாகவும் இருக்கலாம்.

எமக்கு இலகுவான காரியமாக தெரிவது இன்னொருவருக்கு சிரமமாக தெரியலாம்.அதுவும் மனநோய்க்காட்பட்டவரது மனம் கடலில் வெளித்தெரியும் பனிக்கட்டியைப் போன்றது.அதன் கீழுள்ள பனிமலையின் விஸ்தீரணம் யாருக்கும் விளங்குவதில்லை.அவர்கள் குறித்து நிறைய விழிப்புணர்வுகள் அவசியம் தேவை.

அவர்கள் வேண்டுவதெல்லாம் அன்பும் அரவணைப்புமே.தன் மனதிலுள்ள பிரச்சினைகளுக்கு அவர்களுக்கு தீர்வை அவர்கள் கேட்பதில்லை,உணர்வுகளை இறக்கி வைக்க ஒரு தோள் வேண்டும் ,அவ்வளவே.

இயந்திரமயமான வாழ்வில் மனைவிக்கு கணவரின் உணர்வுகளையும் கணவருக்கு மனைவியின் உணர்வுகளையும் புரியவே நேரமில்லை.இனியெப்படி அடுத்த வீட்டுப் பெண்ணை புரிவது?. மனம் நிரம்ப அன்பு இருந்தாலும் வெளிக்காட்ட வாய்ப்பும் கிடைப்பதில்லை.கையிலிருக்கும் தொலைபேசிகளின் இயல்புகளை புரியுமளவிற்கு மனிதர்கள் மனிதர்களை புரிய மெனக்கெடுவதுமில்லை.யாரும் யாருக்கும் சுமைதாங்கியாக இருக்க விரும்புவதுமில்லை.

இவ்வாறான சோகமான செய்திகளை கேள்விப்படும் போது கடந்து செல்வதைவிட எம்மை சூழவுள்ளவர்களில் தோன்றும் மாற்றங்கள் பற்றி கொஞ்சம் கரிசனையெடுப்பது தான் மனிதராய் நம் கடமை.

நன்றி:- Aysha Abubakr (Psychologist)
30/7/19

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker