0%
NewsSri LankaTrending News

சட்டத்தின் பிடியில் கட்டுண்டு கிடக்கும் அப்பாவிகள்…

– எம்.பஹ்த் ஜுனைட் –
(ஊடகவியலாளர்)

ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டால் அந்த நாட்டில் நீதி நிலை குலைந்து விட்டது என்பதே அர்த்தமாகும்.

கடந்த ஏப்ரல் 21ந் திகதி இலங்கைத் தீவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்ற தேடுதல் மற்றும் விசாரணைகளில் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட சிலர் கைது செய்யப்பட்டாலும் சந்தேகத்தின் பெயரில் என பல அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு இன்று வரை நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாமலும் குற்றம் நிரூபிக்கப்படாமலும் பல நாட்களாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற கொடுமை நமது நாட்டின் நீதியின் தடுமாற்றத்தை தெளிவாக சாமான்யருக்கும் தெளிவுபடுத்துகிறது.

எந்த நாட்டிலும் இல்லாத நீதியும், சட்டமும் எமது நாட்டில் ஏப்ரல் 21க்குப் பின்னர் நிலை நாட்டப்பட்டது கண்டு உலகமே வியந்தது. குறித்த ஒரு இனத்தின் மதகுருமார்களுக்கு அரசாங்கமும், அரசியலும், அதிகாரமும், சட்டமும், நீதியும் அஞ்சி தலை கவிழ்ந்து காணப்பட்டது. ஏதோவொரு வகையில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சோனகர் (முஸ்லிம்கள்) இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால் இலங்கையில் வாழும் சோனகர் (முஸ்லிம்) இனத்தின் பொருளாதாரத்தை, அரசியலை இல்லாதொழித்து இலங்கையை விட்டு துரத்தி அடிக்க வேண்டும் என்று முஸ்லிம் மதகுருமார்கள், புத்தி ஜீவிகள், அரசியல்வாதிகள் என பலர் மீதும் பல நூறு போலி குற்றச்சாட்டை சுமத்தினார்கள். அதில் தோல்வி கண்ட சட்டமும், அதிகாரமும் இன்று தலை குனிந்துள்ளது.

குற்றம் செய்தவர்களை கைது செய்வது சட்டம், நீதி. ஆனால் இலங்கையில் சில இனவாத, மத வாத கடும்போக்காளர்களுக்கு அடங்கி அபாண்டம் சுமத்தப்பட்ட ஒருவரை கைது செய்து அவர் குற்றாவளி என்பதை நிரூபிக்க முடியாமல் கைது செய்யப்பட்டவரை சிறையில் அடைத்து வைத்துக்கொண்டு புகார் வழங்குமாறு கோரும் விசித்திரமான சட்டமும், நீதியும் நம் நாட்டில்தான் வரலாறு படைத்துள்ளது.

சட்டத்தை மீறுகின்றவர்கள், சட்டவிரோதமான செயலில் ஈடுபடுபவர்கள், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு நிச்சயமாக அதியுயர் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை. ஆனால் குற்றம் செய்யாத சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பல நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டு குற்றமும் நிரூபிக்கப்படாமலும், விசாரணை மேற்கொள்ளாமலும் சிறைவாசம் அனுபவிப்பது மனித உரிமையை மீறுகின்ற செயற்பாடாகும்.

ஏன் இதுவரை அவர்களின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை? ஏன் இன்னும் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை? சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அப்பாவிகள் அவர்களுக்கு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட திகதியில் சிறைச்சாலையில் இருந்து பொலிசாரால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்னால் நிறுத்தினால் எந்த விசாரணைகளும் இன்றி அடுத்த திகதி குறிப்பிடப்பட்டு சிறைவாசம் அனுப்பப்படுகிறார்கள்.

விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நீதிமன்றத்திற்கும் வரும் உறவினர்கள் ஏமாற்றத்துடனும், கண்ணீருடனும் அழுது புலம்பும் காட்சியை காணும் போது இலங்கையின் நீதியின் நிலை கேள்விக் குறியாகிறது. ஏன் இவ்வாறு இழுத்தடிக்கப்பட்டு அப்பாவிகளை துன்புறுத்துகிறது இந்த சட்டமும், பாதுகாப்பும், நீதியும்?

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய சட்டமும், நீதியும் யாருக்கு பாதுகாப்பு வழங்குகின்றது? யாருக்கு நீதி வழங்குகிறது? குற்றம் புரியாத அப்பாவிகளை உளவியல் ரீதியிலான தாக்கங்களுக்குட்படுத்தி அவர்களை குற்றவாளிகளாக தயார்படுத்த முயற்சிக்கிறார்களா? என சிந்திக்க வேண்டியுள்ளது.

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டிருக்கும் அப்பாவிகளின் குடும்பங்களின் நிலை இன்று கேள்விக்குறியாக உள்ளது. குடும்பத் தலைவன் இல்லாமல் தங்களது குடும்பத்தின், குழந்தைகளின் நிலை மோசமான வறுமை நிலையில் காணப்படுகிறது.

விசாரணை என்ற பெயரில் இடம்பெறும் தொடச்சியான தொந்தரவுகள், அவமானங்கள் அவர்களின் பிள்ளைகளின் கல்வி நிலையை கூட பாதித்துள்ளது. இவ்வாறான மோசமான சூழ்நிலையில் அகப்பட்ட எத்தனையோ பெண்கள் தற்கொலை செய்யக்கூடிய மன நிலையில் காணப்படுகிறார்கள்.

இவ்வாறு மனமுடைந்துபோன மக்கள் இலங்கை அரசாங்கம் மீதும் அரசியல் வாதிகள் மற்றும் நீதி, சட்டம், பாதுகாப்புத்துறை மீதும் கடுமையான ஆத்திரத்தில் காணப்படுகிறார்கள். பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பெயரில் அரசாங்கத்திற்கு எதிரான பயங்கரவாதத்திற்கு தொடக்கப்புள்ளி வைக்கின்றார்களோ என யோசிக்க வேண்டியுள்ளது.

எனவே சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படுபவர்களுக்கு உரிய தண்டனையும் வழங்கி குற்றமற்றவர்களை விடுதலை செய்து நீதி, சட்டத்தின் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு துறைசார்ந்தவர்களுக்கு உண்டு என்பதை தெளிபடுத்த விரும்புகிறேன்.

Get Live Updates
மேலும் வாசிக்க

Qtv Network

கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் அடக்கியொடுக்கப்படும் சிறுபான்மை மக்களுக்கான ஊடகமாக Qtv சமுக வலைத்தளங்களில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை வெளிக்கொனர்வதோடு, இஸ்லாமிய வரயறைகளை பாதிக்காது நவீன தொழிநுட்பங்களை உள்வாங்கி தனித்துவமான நிகழ்ச்சிகளை வழங்குதல்

Related Articles

Back to top button
error: Content is protected !!
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker